Pages

Friday, February 19, 2016

கலெக்டர் அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்:

அரசு பணிகள் முடங்கியது அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது.
கடந்த 10–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆசிரியர் அமைப்புகள், நீதித் துறை, வணிக வரித்துறை ஊழியர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 12–ந்தேதி முதல் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டும் மாலையில் விடுவிக்கப்பட்டும் வந்தனர். நாளுக்கு நாள் அரசு ஊழியர்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது.சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த 8 நாட்களாக தொடர்ந்து பணிகள் நடைபெறாததால் ஆவணங்கள் தேங்கியுள்ளன. இன்று 9–வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.அரசு ஊழியர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு மாற்று போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளனர்.கோரிக்கைகள் குறித்த அரசாணை வெளியாகும் வரை போராட்டத்தை கை விடுவது இல்லை. அதுவரையில் காத்திருப்போம் என்ற முடிவோடு காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்களில் இந்த போராட்டம் இன்று முதல் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள் இரவு பகலாக இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராடுவது என்று முடிவு செய்துள்ளனர்.இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1½ லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். வேலை நிறுத்தத்தில் 4½ லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள்.தேர்தல் வாக்குறுதி, அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குகிறார்கள். காலவரையற்ற வேலை நிறுத்த அவசியம் பற்றியும் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது பற்றியும் எடுத்து கூறுகின்றனர்.சென்னையில் அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் எழிலகம் அருகில் உள்ள ஆவின் வளாகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட தலைவர்கள் பட்டாபிராம், டேனியல், ராமசாமி, கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.புதிய போராட்டம் குறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் இரா. தமிழ்செல்வி கூறியதாவது:–அரசு ஊழியர்களின் மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கைதான ஊழியர்களை மண்டபத்தில் தங்க வைக்கவும், உணவு வழங்கவும் போலீசார் சிரமப்படுகிறார்கள். இதனால் எங்கள் மறியல் பேராட்டத்தை கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தை இன்று முதல் நடத்துகிறோம்.இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எங்களது நியாயமான கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர்களிடம் முறையிடும் வகையில் கலெக்டர் அலுவலகங்களில் இந்த போராட்டம் நடக்கிறது.புதிய பென்சன் திட்டம் ரத்து 13 வருட கோரிக்கையாகும். ஊழியக்குழுவை 5 வருடத்துக்கு ஒரு முறை அமைக்க வேண்டும். ஆனால் 10 வருடம் முடிந்தாலும் கூட ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றவில்லை. இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். 214 நாட்கள் ஒருவர் வேலை செய்தாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இது போன்ற நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகிறோம்.கோரிக்கைகள் குறித்த அரசாணை விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரையில் காத்திருப்பு போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment