Pages

Friday, March 4, 2016

'அரசு பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக உள்ளனர்'


ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமையில் நடந்தது. இதில், பள்ளி கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளால், ஒரு மாதம் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இரண்டாம் முறையாக புத்தகம் வழங்கப்பட்டது. தமிழகத்தில், 11.75 லட்சம் பேர், 10ம் வகுப்பு; 8.86 லட்சம் பேர், பிளஸ் 2 என, மொத்தம், 20 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இன்றைய கல்வி முறை, வேலைக்காக மட்டுமே படிக்கும் வகையில் உள்ளது. படித்ததை தவிர, மற்ற வேலைகளையும் செய்ய தெரிந்து இருந்தால் அதிக வேலை வாய்ப்புகளை பெறலாம். அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லை. இதே நிலை நீடித்தால், 2020ல் அரசு தொடக்கப் பள்ளிகளே இருக்காது என்ற நிலை ஏற்படும்.

கடந்த, ஐந்து ஆண்டுகளில் கல்விக்காக, அரசு சார்பில், 86 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாக கணக்கு உள்ளது. இதில், ஆசிரியர்களின் சம்பளம் தான் அதிகம். ஆனால், இந்த சம்பளத்தை மறந்து விட்டு, ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சரிவர தமிழ் உள்ளிட்ட பாடங்களை படிக்க, எழுத, பேச தெரியவில்லை. தனியார் அமைப்புகள் ஆதிக்கம் பெற்றால், ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படும். எனவே, அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள் முயல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment