Pages

Thursday, December 10, 2015

அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம் வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத் தேர்வை, ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ளத்தால், மக்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், 14ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் செயல்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும், ஒன்பது வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. பின், மிலாடி நபி, 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 1ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 2ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், 14ம் தேதி பள்ளி திறந்த பின் மீண்டும், 24ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டு, 2ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும்.

இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அரையாண்டுத் தேர்வும்; 1 முதல், 9ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவத் தேர்வும் நடத்தப்படுகின்றன.இந்த இரண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும் கூறியதாவது:வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், காலாண்டுத் தேர்வு முடிந்து, 10 நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டு, நான்கில் ஒரு பங்கு பாடங்கள் தான் நடத்தப்பட்டுள்ளன. 10 முதல், பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. 

மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்தாமல், அரையாண்டுத் தேர்வு என்பது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இக்கட்டான இந்நேரத்தில், மாணவர்களை சோதிப்பது சரியான முடிவாக இருக்காது. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட, வெள்ளப் பாதிப்பு மற்றும் குடும்ப சூழலால், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் போகலாம்.இதையும் மீறி தேர்வு நடத்தினால், மதிப்பெண் குறைந்து விட்டதே என, மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, இறுதித் தேர்வில் கவனம் செலுத்த முடியாத அபாயம் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜ் கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, 9ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' தான் வழங்கப்படுகிறது. எனவே, இரண்டாம் பருவத் தேர்வு ரத்தானால், நேரடியாக மூன்றாம் பருவத் தேர்வை சந்திக்க எளிதாக இருக்கும். இல்லையென்றால், மூன்றாம் பருவத்துக்கும் நாட்கள் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment