Pages

Monday, October 12, 2015

சேவையே தெய்வம்: ஏழை குழந்தைகளுக்கு உதவும் 'ஏகம்'

ஏழை குழந்தைகளுக்கு, 'ஏகம்' என்ற அமைப்பின் மூலம், இலவச மருத்துவ சேவை அளித்து வருகிறார், மருத்துவர் சாய்லட்சுமி, 41; அவர் புற்றுநோயை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர் சாய்லட்சுமிக்கு, பூர்வீகம் ஆந்திரா. ஹைதராபாத், மகாத்மா மருத்துவ கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்த மருத்துவமனையில், குல்சும்பி என்ற மூதாட்டி அனுமதிக்கப்பட்டார். மூதாட்டிக்கு உடல் முழுவதும் காயம். முகத்தில் புழு வரத் துவங்கியது. குல்சும்பிக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பு, மாணவியாக இருந்த சாய்லட்சுமிக்கு கொடுக்கப்பட்டது. 




தீர்க்கமான முடிவு:



ஏழையான மூதாட்டி, உணவு வாங்கி கொடுக்க கூட ஆள் இல்லாமல், பசியில் தவித்தார். சாய்லட்சுமி, அவரை நோயாளியாக பார்க்காமல் பாசத்துடன் அரவணைத்து சிகிச்சை கொடுத்தார். மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது தான், 'நான் படித்து முடித்த பின், விளிம்பு நிலை மக்களுக்கு, மருத்துவ சேவை செய்ய வேண்டும்' என, தீர்க்கமாக முடிவெடுத்தார் சாய்லட்சுமி.பின், மேற்படிப்பை முடித்த அவர், சென்னையில், தனியார் மருத்துவமனையில், பணியை துவக்கினார். அப்போதே, அம்பத்துாரில், ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க துவங்கினார். அவர் அங்கு சென்ற சிறிது நாளில், அந்த காப்பக்கத்திற்கு வரும் பச்சிளம் பெண் குழந்தைகள், நோய் தொற்று ஏற்பட்டு சீக்கிரம் இறப்பதை கண்டார். இறப்பு சதவீதத்தை தடுக்க, அங்குள்ள காப்பாளர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது, பால் ஊட்டுவது போன்ற சில அடிப்படை மருத்துவ பயிற்சியினை கொடுத்தார்.இதனால், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்தது. இதையே தமிழகத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு, பெரிய அளவில் செய்ய வேண்டும் என கருதி, 'ஏகம்' என்ற அமைப்பை நிறுவினார்.

இதற்கிடையே, நுரையீரலில் தொற்று ஏற்பட்டு, காசநோயால் சாய்லட்சுமி பாதிக்கப்பட்டார். சிகிச்சை எடுத்த பின், மீண்டும், 'ஏகம்' அமைப்பில் ஈடுபட்டார்.ஆனால், அடுத்த அதிர்ச்சியாக, அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மீண்டும் மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம். ஒரு பக்கம் புற்றுநோயின் தாக்கம்; இன்னொரு பக்கம், 'ஏகம்' அமைப்பின் மூலம், ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். மருத்துவமனையிலேயே துவண்டு போகாமல், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொண்டே, தன் அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு, இலவச மருத்துவ சேவையை செய்தார்.புற்றுநோய் தாக்கத்திலிருந்து முழுவதுமாக குணம் அடைந்து, 'ஏகம்' அமைப்பை சத்தீஸ்கர், உத்தரகண்ட், மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் நிறுவினார். சாய்லட்சுமியின் சேவையை பாராட்டி, மத்திய அரசு, அவருக்கு, 'நாரி புரஸ்கார்' விருதினை கொடுத்து கவுரவித்துள்ளது.


8,000க்கும் மேற்பட்ட...:


'ஏகம்' அமைப்பு பற்றி மருத்துவர் சாய்லட்சுமி கூறியதாவது:சென்னையில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான செயற்கை சுவாச கருவிகளை, நாங்கள் நிறுவியுள்ளோம். இதுவரை, 8,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், எங்கள் அமைப்பின் சார்பில், இலவச மருத்துவ சேவை பெற்றுள்ளனர். தேசிய ஊரக சுகாதார இயக்கத்துடன் இணைந்து, அரசுக்காக நாங்கள் 900 செவிலியர்களை வேலைக்கு எடுத்து, தரமான கவனத்தை அளிக்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி தருகிறோம். அதற்கு அரசே முற்றிலும் நிதியுதவி அளிக்கிறது.குழந்தைகள் கடவுளுக்கு சமம் என்பர். நான் அந்த கடவுளுக்கு சேவையாக தான் இதை செய்கிறேன்.இவ்வாறு, அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 
தொடர்புக்கு: 72990 02848

No comments:

Post a Comment