சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும்
மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும்
ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு
அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில்
மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று
பல்வேறு சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுவாக, அரசு மற்றும்
மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்குவது
மட்டுமே அங்குள்ள பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. கல்வி உரிமை
சட்டப்படி, அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை,
தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று விதி உள்ளது.
ஆனால், அத்தகைய கல்வி பணியில் இருக்கும் ஆசிரியர்களை கால்நடை மற்றும்
மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு உள்ளிட்ட
பல்வேறு அரசு மற்றும் பொதுப் பணிகளில் வலுக்கட்டாயமாக
ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம்
குறைவதுடன், மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதில் நாட்டம் குறைந்துவிடுகிறது.
இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. இதன்மூலம் வரும்
பொதுத் தேர்வில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகளவில் குறையலாம்
என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து 10 மற்றும் பிளஸ் 2 பள்ளி
மாணவர்களிடம் பேசியபோது, ‘அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு
கல்வி பணி தவிர, மற்ற பணிகளில் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர்.
கடந்த அரையாண்டு தேர்வுகளில் நாங்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை.
மூன்றாம் பருவ பாடங்களும் நிறைவு பெறவில்லை. இதே நிலை நீடித்தால், பொதுத்
தேர்வில் பெயிலாகி விடுவோம் என்ற அச்சம் மாணவர்களிடம் நிலவி வருகிறது.
இதனால் எங்களை தனியார் டியூஷன் சென்டர்களில் அதிக பணம் செலவழித்து பெற்றோர்
சேர்த்துள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக அலைவதால், எங்களுக்கு பாடங்களில்
உரிய கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று மாணவர்கள்
கூறுகின்றனர். இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி
மட்டுமல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்–்ட அனைத்து
பணிகளையும் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ‘தனியார் பள்ளிகளில்
பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை கூடுதலாக ஒரு மணி நேரம் அமரவைத்து
சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் எங்களுக்கு ஒரே நாளில்
அனைத்து பாடங்களையும் படிப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது’ என்று
தனியார் பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி,
அவர்களின் கல்வி நேரம் வீணடிக்கக்கூடாது’ என பிரதமர் நரேந்திரமோடி ஏற்கெனவே
வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள்
குழு சமீபத்தில் ஆய்வு நடத்தி மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அறிக்கை
சமர்ப்பித்தது. அதில், ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி அல்லாத மற்ற பணிகளில்
பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அவர்களின் கவனம் கல்வியை தவிர,
வேறு எதிலும் செல்லக்கூடாது’ என்று குழு பரிந்துரைத்தது. இதன்
அடிப்படையில் ஆசிரியர்களுக்கான புதிய பணி விதிமுறைகளை மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள்
கூறுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் முதல்
வாரத்தில் துவங்கும் என்று தமிழக கல்வித்துறை ஏற்கெனவே அட்டவணை
வெளியிட்டுள்ளது.‘இன்னும் ஒரு மாதமே நடுவில் உள்ள நிலையில், பொது
தேர்வுக்கு தயாராகும் அனைத்து பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம்
அதிகரிக்க, சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுப்பார்களா?’ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். விடை கிடைக்குமா?
No comments:
Post a Comment