'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை
வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால்
நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க,
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி பணியை
தவிர, பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர். பள்ளிகளிலும், கல்வி சாராத
மற்ற பணிகளை செய்கின்றனர்; அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல்
பணிகள் போன்றவற்றில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால்,
கல்வியில் ஆசிரியர்களின் கவனம் குறைவதாக, புகார் கூறப்படுகிறது. இதுபற்றி
ஆய்வு செய்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த செயலர்கள் அடங்கிய குழு ஒன்றை,
பிரதமர் மோடி அமைத்தார். இக்குழு தன் ஆய்வை முடித்து, மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அடிப்படை பணி : இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக
வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி வழங்குவது
மட்டுமே, பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. பாடம் நடத்துவது உட்பட, கல்வி
தொடர்பான பணிகளில் மட்டுமே, அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால்,
அவர்கள் வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.
கால்நடை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, போலியோ ஒழிப்பு, ரேஷன் கார்டு
சரிபார்ப்பு என, வெவ்வேறு அரசு மற்றும் பொது பணிகளில், பள்ளி ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம்
குறைந்து, கல்வியில் அவர்கள் கவனம் இருப்பதில்லை; மாணவர்களின் கல்வி
பெருமளவு பாதிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார்
பள்ளிகளிலும், இந்நிலை காணப்படுகிறது. ஆசிரியர்கள், கட்டணம் வசூலிப்பது
உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களின் கட்டளைப்படி,
வேறு சில பணிகளையும் செய்கின்றனர்.
தடுக்க வேண்டும் : பல்வேறு துறை செயலர்களை கொண்ட குழு நடத்திய ஆய்வில்,
இந்த தகவல்கள் உறுதியாகி உள்ளன. பள்ளி ஆசிரியர்களை, கல்வி அல்லாத மற்ற
பணிகளுக்கு பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என, அக்குழு
பரிந்துரைத்து உள்ளது. கல்வியை தவிர மற்ற பணிகளில், ஆசிரியர்களின் கவனம்
செல்லக் கூடாது என, அறிவுறுத்தி உள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில்,
பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளை வகுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் முடிவு செய்துள்ளது; விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கல்வி உரிமை சட்டம் : கல்வி உரிமை சட்டத்தின்படி, மக்கள் தொகை
கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகிய மூன்று
பணிகளுக்கு மட்டுமே, பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டு உள்ளது; மற்ற பணிகளுக்கு, அவர்களை பயன்படுத்துவதை, அரசு
நிறுத்த வேண்டும் என, அச்சட்டம் கூறுகிறது.
பஸ்களில் ஏற்றும் ஆசிரியர்கள்! : பிரதமர் மோடி அமைத்த குழு, தனியார் பள்ளி
ஆசிரியர்கள் பற்றி கூறியுள்ளதாவது:அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி,
தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்களும், கல்வி அல்லாமல், மற்ற பணிகளை
செய்யும் சூழல் நிலவுகிறது. கட்டணம் வசூலிப்பது, குழந்தைகளை பள்ளி பஸ்களில்
ஏற்றி அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
இவ்வாறு அந்த குழு கூறியுள்ளது.
No comments:
Post a Comment