Pages

Tuesday, July 21, 2015

மூடப்படும் 1200 பள்ளிகள் தி.மு.க. ஆட்சி வந்ததும் திறக்கப்படும்: கருணாநிதி அறிக்கை

சென்னை, ஜூலை 21–
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
1,200 அரசுப் பள்ளிகளை தமிழகம் முழுவதும் மூடுவதென்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்று செய்தி வெளிவந்துள்ளது. தனியார் பள்ளிகளும், சுயநிதிப் பள்ளிகளும் அதிக அளவில் ஆதாயம் பெற வேண்டுமென்பதற்காக அ.தி.மு.க. அரசு 1200 பள்ளிகளை இழுத்து மூட முடிவு செய்திருக்கிறதா என்ற முக்கியமான கேள்வி சமூக முன்னேற்றத்தில் ஆர்வம் உடையோர் மத்தியில் எழுந்துள்ளது.

1952–ல் மூதறிஞர் ராஜாஜி முதல்–அமைச்சராக இருந்த போது, குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக, இப்படித் தான் ஆயிரக்கணக்கான பள்ளிகளை இழுத்து மூடினார். அப்படி மூடப்பட்ட பள்ளிகளையெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் முதல்–அமைச்சராக வந்த பிறகு தான் மீண்டும் திறந்தார். அதைப் போல தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட இந்த 1200 பள்ளிகளும், அடுத்து வரவிருக்கின்ற ஆட்சியிலே தான் மீண்டும் திறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் 2011–ம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அ.தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கையில், பத்தி 80–ல், “அ.தி.மு.க. அரசு அனைத்துக் குழந்தைகளையும், தொடக்கப் பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் சேர்த்துத் தரமான கல்வியை வழங்கும். அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து 100 விழுக்காடு மாணவர்களும் தொடக்கக் கல்வி பெறுவதற்கு வழிவகை செய்வதே இந்த அரசின் குறிக்கோளாகும்” என்று உறுதியேற்றுக் கொண்டார்களே, அதற்கும், தற்போது 1200 பள்ளிகளை மூட முடிவு செய்திருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? தமிழக மக்களுக்குக் கொடுத்த வேறு பல உறுதிமொழிகளை மறந்து விட்டதைப் போல, பள்ளிக்கல்வி தொடர்பாகக் கொடுத்த உறுதி மொழியையும் அ.தி.மு.க. அரசு மறந்தே விட்டது!
இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர், க. மீனாட்சிசுந்தரம் என்னை வந்து சந்தித்து, ஆசிரியர்களின் மனக்குறைகளையெல்லாம் சுட்டிக்காட்டி, தாங்கள் நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு கழகத்தின் ஆதரவைக் கோரிய போது, ஆசிரியர்களின் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு தி.மு.க.வின் ஆதரவு என்றும் உண்டு என்று தெரிவித்து அனுப்பினேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஐந்தாயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இரண்டாயிரம் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் பெறாமலே நடைபெறுவதாக ஏடுகளில் செய்தி வந்தது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கதி பிற்காலத்தில் என்னவாகும்? மேல் படிப்புக்கும், பணிக்கும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் தெரியவில்லை.
செயல்பட்டு வரும் ஒரு பள்ளிக்கு அருகிலேயே மற்றொரு பள்ளியைத் தொடங்க யாராவது விரும்பினால், ஏற்கனவே நடைபெற்று வரும் பள்ளிகளிடம் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழ் ஒன்றைப் பெற்றிட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சான்றிதழ் தற்போது வலியுறுத்தப்படுவதில்லையாம்.
கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் எந்தவிதமான அங்கீகாரமும் தரத் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் அதனைக் கொடுக்க முன் வராதவர்கள் தான் அரசின் அங்கீகாரம் இல்லாமலேயே பள்ளிகளை நடத்தி வருகிறார்களாம்.
“ஒரு பள்ளியில் ஓராண்டு பணியிலே இருந்தால், அந்த ஆசிரியர், மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்” என்று இதுநாள் வரை இருந்த விதியை மாற்றி, மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் 1–6–2012க்கு முன் பணியில் 3 கல்வி ஆண்டு பணியாற்றிய பின்னே நான்காவது ஆண்டு தான் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறும் அரசாணை, அதிகார வர்க்கத்தினர் ஆதாயம் கருதிச் செய்யும் நிர்வாக மாறுதலுக்குத் தான் வழி வகை செய்யும்.
மேலும் பணி நிரவலே கூடாது என்று ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றி இப்போது பணி நிரவல் மூலம் காலி இடங்களை நிரப்புவதற்கான குறுக்கு வழி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி என்ற கொள்கைக்குக் குந்தகம் ஏற்படுத்திடும் வகையில், ஆங்கில வழிக்கல்வி முறையைத் துவக்கப் பள்ளிகளில் அ.தி.மு.க. அரசு அறிமுகப்படுத்திய போதிலும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நியமிக்கவில்லை. குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி, அரசுப் பள்ளிகளை மூட தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கல்வி வளர்ச்சியைக் கருத்திலே கொள்வதுடன் 1200 பள்ளிகளை மூடுகின்ற முடிவினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொன்னார்களே, இதுவரை ஒரு முறையாவது அழைத்துப் பேசியிருக்கிறார்களா?
மொத்தத்தில் இந்த நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், சமச்சீர்க் கல்விக்கு எதிரான நடவடிக்கைகளும், அச்சடித்த பாடப்புத்தகங்களில் “ஸ்டிக்கர்கள்” ஒட்டி மறைப்பதும், விநியோகம் செய்யப்பட்ட பாடப்புத்தகங்களைத் திரும்பப் பெறுவதும் என்று மாணவர்களின் கல்விக்கெதிரான காரியங்களும், ஆசிரியர்கள் நலனை அலட்சியப்படுத்தும் காரியங்களுமே நடைபெற்றிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பேரபாயத்தில் சிக்கிப் படும்பாடு, அனைவரையும் பதறச் செய்யக் கூடியதாகும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 

No comments:

Post a Comment